சித்தர்கள் வழிபட்ட தலமாதலால் 'சித்தீஸ்வரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் 'சித்தநாதேஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமத்துடன் பெரிய வடிவில் தரிசனம் தருகின்றாள். 'அழகாம்பிகை' என்ற பெயரும் உண்டு.
கோஷ்டத்தில் வரசித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிச்சாடணர், நடராஜர் (கல் சிற்பம்), மேதாவி மஹரிஷி, கோரக்கர் சித்தர், சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இங்கு ஒரே சன்னதியில் மூன்று சண்டேஸ்வரர்கள் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், மழலை மகாலட்சுமி, சப்த கன்னியர், பஞ்ச லிங்கங்கள், கால பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
மழலை மகாலட்சுமி அவதாரத் தலம். அதனால் பௌர்ணமி தோறும் மழலை மகாலட்சுமி சன்னதி எதிரில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன.
மாசி மாதம் 16ம் தேதி முதல் 28 ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழும் காட்சியைத் தரிசனம் செய்யலாம்.
மேதாவி மஹரிஷி, கோரக்கர் சித்தர் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
|